ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் இருந்து கிடைத்த ஆதரவைவிடவும் பேராதரவு பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“வடக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரு தேசிய அமைப்புமீது நம்பிக்கை வைத்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலின்போது எம்மீது வைத்த நம்பிக்கையைவிடவும் பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் அதிக நம்பிக்கை கொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். கிழக்கு மற்றும் மலையகத்திலும் பேராதரவு கிடைக்கப்பெறும்.
வடக்கிலுள்ள பிரதான கட்சியொன்றின் தலைவரொருவரை அண்மையில் சந்தித்தேன். பொதுத்தேர்தலின் பின்னர் அவர்களின் அணி எமது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாரென கூறினார்.
அத்துடன், நாங்கள் உங்களுடன் வேலை செய்யாவிட்டாலும், மக்கள் வேலைசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கடைசியாகக் கூறினார்.
எனவே, பொதுத்தேர்தலில் வடக்க, கிழக்கு மற்றும் மலையகத்திலும் எமக்கே வெற்றிகிட்டும்.” – என்றார் ஜனாதிபதி அநுர.