ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் கைது இடம்பெற்றுள்ளது.
முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்,
“அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என வரலாற்றில் பதிவாவதை நாம் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, தான் வெளியிட்ட கருத்து தவறாகத் திரிபுபடுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளதாகச் சாகர காரியவசம் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.