அரசியல் பழிவாங்கலுக்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவென்பது முழு அதிகாரம்கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அல்ல. அரசியல் நோக்கம் கொண்ட அந்த விசாரணையை அறிக்கையை நாம் ஏற்கமாட்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
விசாரணையை குழப்பும் நோக்கிலேயே ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. அவ்வாறான வலியுறுத்தல்களுக்கு நாம் அடிபணியமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது விஜித ஹேரத் மேலும் கூறியவை வருமாறு,
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதன்முதலில் குழுவொன்றை நியமித்தார். அக்குழு அறிக்கையொன்றை முன்வைத்தது. அதன்பின்னர் நாடாளுமன்றத்தால் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவாலும் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் பூரண அதிகாரம் கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நிறுவப்பட்டது. இக்குழுவும் தனது அறிக்கையை முன்வைத்தது.இதற்கிடையில் சிஐடி உள்ளிட்ட பிரிவுகளும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துவந்தன.
எனினும், அரசியல் காரணங்களுக்காக விசாரணைகளை முன்னெடுத்துவந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர், சிலர் விலக்கப்பட்டனர். உரிய வகையில் விசாரணை நடைபெறுவதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவேதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு முறையான விசாரணை அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. கத்தோலிக்க சபையும் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தது.
2024 ஜுன் 9 ஆம் திகதி, ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நாம் ஸ்தாபித்தோம்.
இவ்வாறு நாம் குழு அமைத்து 3 நாட்களுக்கு பிறகு அதாவது ஜுன் 12 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் குழுவொன்று அமைக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தவறிழைத்துள்ளனரா,
குறைப்பாடுகள் நடந்துள்ளனவா என்பது பற்றியே ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. அஸ்வில் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டது.
சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இரு குழுக்களும் அறிக்கைகளை முன்வைத்தன. இவ்விரு குழுக்களும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அல்ல. இக்குழுக்களின் இரு அறிக்கையையே கம்மன்பில வைத்துக்கொண்டு சுப்பர் ஸ்டார் ஆகுவதற்கு முயற்சிக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அவ்விசாரணையின்போது மேற்படி அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களும் கருத்திற்கொள்ளப்படும்.
அரசியல் நோக்கங்களுக்காகவே 2024 ஜுன் மாதம் ரணில் விக்கிரமசிங்கவால் அல்விஸ் குழு அமைக்கப்பட்டது. குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி அல்விஸ் தொடர்பிலும் சர்ச்சைகள் உள்ளன. நீதிச்சேவை ஆணைக்குழுவால் அவர் சேவையில் இருந்துகூட நீக்கப்பட்டுள்ளார்.
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரையும் இலக்கு வைத்தே குழு அமைக்கப்பட்டது என்பது புலனாகின்றது. நாம் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்த பின்னரே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர். தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் பற்றியும் அறிக்கையில் உள்ளது. அது கம்மன்பிலவின் கண்களுக்கு தெரியவில்லை. தற்போது நித்திரையில் இருந்து எழுந்தவர்போல் கதைக்கின்றார். அவர் யாரின் ஒப்பந்தத்தை செயற்படுத்துகின்றார் என்பது தெளிவாகின்றது.
அரசியல் நோக்கங்களுக்காக , அரசியல் பழிவாங்களுக்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் ஏற்கமாட்டோம். முழுமையான புதிய விசாரணைiயை ஆரம்பிப்போம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம். இது விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோம். அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் தராதரம்பாராது நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.