2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் - சதித்திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சேகரித்தமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் , இந்த 25 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் தாக்கல் செய்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பான தீவிரவாதக் குழுவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த பலருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இவ்வழக்கில் அடங்குவதோடு, பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளவர்களில் நௌபர் மௌலவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 270 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை உட்பட பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பின்னரே சட்டமா அதிபரினால் 25 சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க திரிபாய ஒன்றை நியமிக்குமாறு கோரப்பட்டது.
அதன்படி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், குறித்த 25 பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.