ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்தார்.
2014-ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்குகளிலிருந்து, மாரவிலாவில் உள்ள ஒரு தனியார் உணவு நிறுவனத்திற்கு 330,000 ரூபாவைச் செலுத்துமாறு, அப்போது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்ன, உத்தரவிட்டார் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.