புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையிலிருந்த புளியம்பழத்தை எடுத்து விளையாடியவாறு சாப்பிட்டபோது, புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கிச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட குடும்பத்தினர், சிறுமியை உடனடியாக லொறி ஒன்றில் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.