அதிகளவான இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அறுகம்பே பகுதிக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
' இஸ்ரேல் பிரஜைகளால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடமொன்று அறுகம்பே பகுதியில் உள்ளது. பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளானவை இஸ்ரேலியர்களை அதிகம் கவர்ந்துள்ள பகுதியாகும்.
அறுகம்பே பகுதிக்கு வரும் இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
நபர்கள் சோதனை, வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்ககளை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எமக்கு ஏதேனும் புலனாய்வு தகவல் கிடைத்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறுகம்பே பகுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்திருக்கக்கூடும்." - என்றார்.