வீட்டிற்குள் ஆயிரக்கணக்கான பொதிகளைப் பதுக்கிய அமேஷன் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் அமெரிக்காவின் ஓக்லஹோமா கவுண்டி (Oklahoma County) என்ற நகரில் இடம்பெற்றுள்ளது. அந் நகரின் ஷெரிப் அலுவலகம், கடந்த புதன்கிழமை இச்செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுள்ளது.
இப்பகுதியில் சட்டவிரோதமான பொருட்கள் பதுக்கப்படுவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் – நீதிமன்றத்தின் ஆணைபெறப்பட்டு இத்தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதலின் போது சுமார் 600 வெற்று அமேஷன்; பொதிகள் வீட்டுக்கு வெளியே கொட்டப்பட்டிருந்தன. வீட்டின் விறாந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான பிரிக்கப்படாத அமேஷன் பொதிகள் காணப்பட்டன. வீடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாத பொதிகளே காணப்பட்டன என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரில் இருவர் சட்டவிரோத குடியேறியவர்கள். இவர்களில் கியூபாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் அமேஷன் மூன்றாம் தரப்பு ஓட்டுநராக பணியாற்றிவர். ஆதாவது அமேஷனின் நேரடி ஊழியர் அல்லர்.கியூபாவில் இருந்து சட்டபூர்வமாக குடியேறிய மற்றையவர் டிரக்கை பயன்படுத்தி பொதிகளை விநியோகித்து வந்தார்.இவர்கள் மூவரும் பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவற்றை ஒருமித்து இத்திருட்டில் ஈடுபட்டுள்ளமை அதிகாரிகளால கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் தினத்திற்குக்குள் வழங்கப்படவேண்டிய பொருட்களையே இவர்கள் திருடியுள்ளனர் எனவும் கைப்பற்றப்பட்ட பொதிகளை அமேஷன் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் கையாடல் செய்தல் உட்பட 15 குற்றங்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்கை எதிர்கொள்ளவுள்ளனர்.