ஈரானுக்கு எதிரான போரை தொடர்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 50-48 என்ற கணக்கில் இத்தீர்மானம் நிறைவேறியது.
இதில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து சில குடியரசுக் கட்சி செனட்டர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேபோன்றதொரு தீர்மானம் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் (House of Representatives) நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானம் பெரும்பாலும் ஒரு அடையாளப்பூர்வமான நடவடிக்கை மட்டுமே ஆகும்.
ஏனெனில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட மாட்டாது என்பதோடு, இதற்குச் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கிடையாது.
ஈரானுடன் ட்ரம்ப் உடன்பட்டுள்ள அமைதித் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையிலும், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறாத இந்த மோதல் ஐந்தாவது மாதத்தை நெருங்கும் சூழலிலும் இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், இது தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் அர்த்தமற்ற ஒன்று என்று சாடியுள்ளார்.
" நான் ஈரானை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு வந்துவிட்டேன். ஆனால் அமெரிக்க செனட் சபையோ தவறான நேரத்தில் இந்த அர்த்தமற்ற 'போர் அதிகாரச் சட்ட' (War Powers Act) வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த செனட்டர்கள் எனது பணியை மேலும் கடினமாக்கியுள்ளனர், ஆனால் நான் எப்படியாவது இதைச் செய்து முடிப்பேன், ஏனென்றால் நான் எப்போதும் அதைச் செய்வேன்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டின் போர் அதிகாரத் தீர்மானம் (War Powers Resolution) இயற்றப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்து இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடும் கூட்டுத் தீர்மானத்திற்கு (Concurrent resolution) ஒப்புதல் அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
கூட்டுத் தீர்மானம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பத்தை அல்லது உணர்வை வெளிப்படுத்துவதாகும்.