Brisbane தெற்கு பகுதியில் பெண்ணொருவரும், கைக்குழந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக அந்தப் பகுதியின் சாலையில் கார் மோதி படுகாயமடைந்த ஒரு நபரை மீட்ட அதிகாரிகள், அவரது அடையாளத்தை வைத்து பெலிவா பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று சோதித்தபோது இந்த உயிரிழப்புகளைக் கண்டறிந்தனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் அந்த நபருக்கு, கார் விபத்திற்கு முன்பே கழுத்தில் காயங்கள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் அல்லது காணொளிகள் இருந்தால் பொதுமக்கள் வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதியளித்துள்ள காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.