“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில்,
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான் விரும்பவில்லை. என்றாலும் அநேகமாக அதுதான் நடக்கும்.
எனினும், இப்போது நாம் ஒரு முழுமையான ஆட்சி மாற்றத்தை அடைந்திருப்பதால் அங்கு மாறுபட்ட, அதிக அறிவுக்கூர்மை கொண்ட, தீவிரவாத சாய்வற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன.
ஒருவேளை புரட்சிகரமான வகையில் ஏதேனும் ஒரு அற்புதம் நிகழக்கூடும். யாருக்குத் தெரியும்? உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவு, அதற்கான விடையை நாம் அறிந்து கொள்வோம்.
47 ஆண்டுகாலமாக நீடித்து வந்த மிரட்டிப் பறித்தல், ஊழல், கொலைகள் இறுதியாக ஒரு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவானாக!” என்று தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்த பதிவை அடுத்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இதுவரை பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்படாத சில கருவிகள் எங்கள் வசம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த ட்ரம்ப் முடிவெடுக்கலாம்.
ஈரானியர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர் நிச்சயமாக அவற்றைப் பயன்படுத்த முடிவெடுப்பார்.
ட்ரம்ப் ஏற்கெனவே நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்கு இணங்க இரவு 8 மணிக்குள் ஈரானிடம் இருந்து உரிய பதிலைப் பெற முடியும் என்பதில் அமெரிக்கா இப்போதும் நம்பிக்கையுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.