அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை முடக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த முரண்பாடுகளால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கடல்வழி முற்றுகையில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு அமெரிக்கா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா இதில் நேரடியாகப் பங்கேற்காத நிலையில், இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றத்தைத் தணிக்க தூதரக ரீதியிலான தீர்வுகளே அவசியம் என்பதை ஆஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்துகின்றது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு
"உலகின் மிகச்சிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியைத் தொடங்கும்.
அனைவரும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், ஈரானோ 'கடலில் எங்கோ கண்ணிவெடிகள் இருக்கலாம்' என்று கூறி மிரட்டல் விடுக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒருபோதும் இதற்குப் பணிய மாட்டார்கள். ஈரானுக்கு சட்டவிரோதமாகக் கட்டணம் செலுத்தும் சர்வதேசக் கப்பல்களை வழிமறித்துச் சோதனையிடக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்தகையோருக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது." - என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.