ஆஸ்திரேலியாவில் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தவும், விசா விதிமுறைகளைக் கடுமையாக்கவும் இலக்கு வைத்துள்ள 'ஆஸ்திரேலிய விழுமியங்கள் குடியேற்றத் திட்டத்தை' (Australian Values Migration Plan) எதிர்க்கட்சிக் கூட்டணி Coalition வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் கருத்து வெளியிடுகையில்,
" ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்." என்றார்.
இந்த விழுமியங்களை மீறும் நபர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் (Booted out) என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
விசா விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவைப் போலவே தங்களது சமூக ஊடகக் கணக்கு விபரங்களை வழங்க வேண்டும். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய இது உதவும்.
இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை 'பாதுகாப்பான நாடுகள்' பட்டியலில் இணைத்து, அங்கிருந்து வரும் தேவையற்ற புகலிடக் கோரிக்கைகளை (Protection Visas) விரைவாக நிராகரித்தல்.
நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்படும்.
நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் அரசால் வழங்கப்படும் 5 சதவீத வீட்டுக் கடன் முன்பணத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும்.
விமர்சனங்கள்
இந்தத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள குடியேற்றத்துறை முன்னாள் செயலாளர் அபுல் ரிஸ்வி,
"விழுமியங்களை வலியுறுத்துவது நல்ல விஷயம் என்றாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் செலவுகள் குறித்து தெளிவான விபரங்கள் இல்லை" என்று கூறியுள்ளார்.
ஆளுங்கட்சியான லேபர் கட்சியின் அமைச்சர்கள் இந்தக் கொள்கையை விமர்சித்துள்ளனர்.
எதிர்க்கட்சிக் கூட்டணி 'ஒன் நேஷன்' (One Nation) கட்சியுடன் போட்டி போடுவதற்காகவே இத்தகைய தீவிரமான கொள்கையை முன்வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த புதிய கொள்கை மாற்றங்கள் ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடியேற்றச் சட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.