மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, பெட்ரோலில் அனுமதிக்கப்படும் கந்தகத்தின் (Sulphur) அளவைத் தற்காலிகமாக உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், இந்தத் தளர்வு வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறையின்படி, பெட்ரோலில் அனுமதிக்கப்படும் சல்பர் அளவு வழக்கமான 10 ppm-லிருந்து (parts per million) 50 ppm ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, கூடுதல் எரிபொருளைப் பெறுவதற்கான உயர்மட்டப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலில் சல்பர் அளவு அதிகரிப்பது காற்று மாசடைவதற்கும், வாகன என்ஜின்களின் செயல்பாட்டைப் பாதிப்பதற்கும் வாய்ப்புள்ளது. இதனாலேயே வழக்கமாக இதன் அளவு மிகக் குறைந்த மட்டத்திலேயே பேணப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலவும் அசாதாரணமான எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டே, தற்காலிகத் தீர்வாக இந்தத் தளர்வு செய்யப்பட்டுள்ளது.