இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு தமது மாநிலம் தயாராக இருப்பதாக விக்டோரியா மாநிலத்தின் பிரீமியர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஜுலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் நடைபெற்ற குவாட் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார்.
இதன்போது இந்திய பிரதமரின் ஆஸ்திரேலிய விஜயம் பற்றி பேசப்பட்டது.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவும் ஆழமான உறவுகள் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் விக்டோரியா மாநில பிரீமியர்.
விக்டோரியாவில் வாழும் ஏராளமான இந்திய வம்சாவளியினர், இரு நாடுகளையும் இணைக்கும் மிக முக்கியமான பாலமாகத் திகழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் வருகையைத் தனது மாநிலத்தில் வரவேற்று உபசரிக்க ஆவலாக இருப்பதாகவும், இந்த நட்புறவு இரு நாடுகளின் பொருளாதார மற்றும் கலாச்சார பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் பிரீமியர் ஜெசிந்தா ஆலன் குறிப்பிட்டுள்ளார்.