ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியத்தை 4.75 சதவீதம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 28 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 1 முதல் அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் 4.75 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் மணித்தியால ஊதியம் (hourly rate) 24.44 டாலராகவும், வாராந்திர ஊதியம் 1,004.90 டாலராகவும் உயரும்.
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் (ABS) தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.2 சதவீதமாக இருந்தது.
தற்போதைய ஊதிய உயர்வு இந்த பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருந்தாலும், தொழிற்சங்கங்கள் கோரியதை விடக் குறைவாகவும், முதலாளிகள் (நிறுவனங்கள்) எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவும் உள்ளது.
நாட்டின் பணியிட உறவுகள் தீர்ப்பாயமான Fair Work Commission - FWC , தனது வருடாந்திர ஊதிய மறுஆய்வு முடிவை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் மற்றும் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் பணவீக்கம் உள்ளிட்ட பல பொருளாதார காரணிகளால், இந்த ஆண்டு முடிவெடுப்பது "குறிப்பாக சவாலானது" என்று அது குறிப்பிட்டுள்ளது.
பேர் வொர்க் கமிஷனின் தலைவர் ஆடம் ஹட்சர் (Adam Hatcher) கூறுகையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு உண்மையான ஊதிய இடைவெளியைக் குறைத்த போதிலும், தற்போதைய பணவீக்க உயர்வு அந்த இடைவெளியை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
2026 ஜூன் வரையிலான ஆண்டிற்கான ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் என மத்திய வங்கி கணித்துள்ள நிலையில், இந்த இடைவெளியை முழுமையாக நிரப்ப 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"பணியாளர்களுக்கு உண்மையான ஊதிய இடைவெளியை முழுமையாக அடைக்கக்கூடிய அளவிலான ஒரு ஊதிய உயர்வை வழங்குவது தற்போதைய சூழலில் சாத்தியமானதோ அல்லது பொறுப்பானதோ அல்ல என்ற வருத்தத்தக்க முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்," என்று ஹட்சர் கூறினார்.
தொழிற்சங்கங்கள் 6 சதவீத ஊதிய உயர்வை கோரியிருந்தன. இது வழங்கப்பட்டிருந்தால், அது வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஊதிய உயர்வாக பதிவாகியிருக்கும் என்பதுடன், குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலத்திற்கு 26.45 டாலராக உயர்ந்திருக்கும்.
இந்த ஊதிய உயர்வு மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவும், கடந்த காலங்களில் இழந்த ஊதிய வளர்ச்சியை ஈடுசெய்யவும், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தால் அதை எதிர்கொள்ளவும் உதவும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (ACTU) வாதிட்டது.
ஆயினும், செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட 4.75 சதவீத உயர்வு பணவீக்கத்தை விட அதிகமாக இருப்பதால், இது தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறி இந்த முடிவை தொழிற்சங்கம் வரவேற்றுள்ளது.
"ஃபேர் வொர்க் கமிஷன் அனைவரின் இழப்பையும் உடனடியாக ஈடுசெய்யும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு அவர்கள் கூறியது போல 5 சதவீத உயர்வு தேவைப்பட்டிருக்கும்," என்று ACTU செயலாளர் சாலி மெக்மன்னஸ் (Sally McManus) கூறினார்.
"அவர்களும் அந்த இலக்கை அடைய விரும்புகிறார்கள் — ஆனால் நாங்கள் விரும்பும் வேகத்தில் அவர்கள் நகர விரும்பவில்லை, அவ்வளவுதான்."
தொழிற்சாலைகளுக்கு போதுமான ஊதிய உயர்வு கிடைக்காவிட்டால், அது வணிகங்களையும் பாதிக்கும் என்று மெக்மன்னஸ் எச்சரித்தார்.
"தொழிலாளர்களுக்கு போதுமான ஊதிய உயர்வு கிடைக்காவிட்டால், மக்கள் உணவிற்கான செலவைக் குறைப்பார்கள், மருத்துவரிடம் செல்வது போன்ற அத்தியாவசியக் காரியங்களைக் குறைத்துக் கொள்வார்கள். உங்கள் தொழிலாளர்கள் தான் பெரும்பாலும் உங்கள் வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பின்வாங்க நேரிட்டால், அது ஒட்டுமொத்த சந்தையின் நுகர்வையும் குறைக்கும்."
இருப்பினும், தொழிற்சங்கங்களின் 6 சதவீத கோரிக்கை "வேடிக்கையானது" என்று குறிப்பிட்ட முதலாளிகள் தரப்பு, பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள "ஆழ்ந்த நிச்சயமற்ற சூழலை" கருத்தில் கொண்டு 3.9 சதவீத உயர்வை மட்டுமே முன்மொழிந்திருந்தது.
ஆஸ்திரேலிய தொழில்துறை குழுவின் (AIG) தலைவர் இன்னெஸ் வில்லாக்ஸ் (Innes Willox) பேசுகையில், "நாம் பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மேல் ஊதிய உயர்வு வழங்குவது வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்," என்றார்.
"வணிகங்களால் இந்த செலவுகளைத் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாது. நுகர்வோர் மீது இந்த சுமையை சுமத்தாமலோ அல்லது தங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலோ நிறுவனங்களால் இந்த ஊதிய உயர்வை ஈடுசெய்ய முடியாது."
ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (ACCI) கூறுகையில், இந்த 4.75 சதவீத உயர்வு நாட்டின் சிறு வணிகங்களால் "தாங்க முடியாத ஒன்றாக" இருக்கும் என்றும், இதனால் அவர்கள் இந்த செலவை நுகர்வோர் மீது சுமத்த வேண்டியிருக்கும் அல்லது தாங்களே நஷ்டத்தை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது.
"இது சில வணிகங்கள் முடங்கிப்போவதற்குக் காரணமாக அமையலாம்," என்று ACCI இன் கொள்கைத் தலைவர் டேவிட் அலெக்சாண்டர் (David Alexander) தெரிவித்தார்.
"மற்ற வணிகங்கள் தங்களின் முதலீட்டுத் திட்டங்களைக் குறைத்துக் கொள்ளும். எனவே இது வணிக சமூகத்திற்கு நல்ல செய்தி அல்ல."
ஊதிய உயர்வு என்பது ஒரு வணிகத்தின் வெற்றியோடும், அதன் உற்பத்தித் திறனோடும் (productivity) பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.