காசா முனையில் இருந்து 415 பேரை வெளியேற்ற ஆஸ்திரேலியா உதவியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆஸ்திரேலியப் பெண்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமையன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் மதிப்பீட்டுக் குழு (Senate estimates) கூட்டத்தின் போது, பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் அங்குள்ள ஆஸ்திரேலியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு குறித்த விவாதம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடல் வழியாகக் காசாவிற்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற சர்வதேச உதவிக்குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று ஆஸ்திரேலியப் பெண்கள், இந்த நாடாளுமன்ற விவாதத்தை நேரடியாகப் பார்வையிட்டனர்.
இவர்களது மனிதாபிமான உதவிக் கப்பல்களை வழிமறித்து, தங்களைச் சிறைபிடித்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் (IDF), தங்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கடுமையான வன்முறைகளைப் பிரயோகித்ததாக அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த மூன்று பெண்களையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளைக் கேட்டறியத் தயாராக இருக்கிறீர்களா? என்று கிறீன்ஸ் கட்சியின் (Greens) செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பென்னி வாங் (Penny Wong) கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
"உங்களைப் போன்ற ஒரு அரசியல் கட்சியால், இதுபோன்ற ஒரு அரசியல் மேடையில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை," என்று அமைச்சர் வாங் காட்டமாகத் தெரிவித்தார்.
எனினும், பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க அமைச்சர் வாங் ஒப்புக்கொண்டதாக செனட்டர் சூபிரிட்ஜ் தெரிவித்தார்.
இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரால் தான் கற்பழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஜூலியட் லெமண்ட் என்ற பெண், தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாகப் பேச வேண்டும் என்று கோரினார்.
"இவ்வளவு காட்டுமிராண்டித்தனமான ஒரு சம்பவத்தை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது என்பதை சாதாரண ஆஸ்திரேலிய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் பென்னி வாங், ஆஸ்திரேலியப் பெண்களுக்கு நேர்ந்த இந்த விவகாரம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்துள்ளதா? என்று செனட்டர் டேவிட் போகோக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
"இதுதொடர்பாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளோம். மிக விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எங்களால் முடிந்தவரை மிக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அந்த விசாரணையின் தன்மையைத் தீர்மானிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை," என்றார்.