ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு சீனா 55 சதவீத கூடுதல் வரியை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாயிகளையும் உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் சில கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி இறக்குமதி வரம்பு 2,05,000 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பை மீறும்போது, 55 சதவீத கூடுதல் வர்த்தக வரி தானாகவே நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா தனக்கு விதிக்கப்பட்ட வரம்பில் ஏற்கனவே 90 சதவீதத்தை எட்டிவிட்டதாக சீன அதிகாரிகள் இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மாட்டிறைச்சி உற்பத்தியாளர்களுக்கு சீனா பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து (Queensland) மாகாணத்தில் இருந்து மட்டும் 4.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மாட்டிறைச்சி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரம்புகளால் தங்களது சந்தை வாய்ப்புகள் முடக்கப்படலாம் என்றும், இது ஏற்றுமதியாளர்களிடையே பெரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க சந்தைக்கு செல்ல வேண்டிய பெருமளவிலான மாட்டிறைச்சி மலிவு விலையில் சீன சந்தைக்கு திருப்பி விடப்பட்டது.
இது சீன உள்நாட்டு உற்பத்தியாளர்களை உடனடியாக பாதித்தது. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு சீனா இந்த இறக்குமதி வரம்புக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.