ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில், "ஆஸ்திரேலிய மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்" என்று Elon Musk எச்சரித்துள்ளார்.
மக்கள்தொகை வீழ்ச்சி என்பது மனிதகுலத்திற்கு உலகளாவிய அச்சுறுத்தல் என்று எச்சரித்து வரும் Elon Musk (இவர் 14 குழந்தைகளின் தந்தை ஆவார்), அண்மையில் ஆஸ்திரேலியர்களை "அழிந்து வரும் இனம்" (Endangered species) என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்,
ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதக் குறைவு குறித்த ஒரு செய்திப் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, "அவர்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஸ்டீபன் மில்லரின் மனைவியும், போட்காஸ்ட் தொகுப்பாளருமான கேட்டி மில்லர் என்பவர் ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகித நெருக்கடி குறித்த ஒரு தொலைக்காட்சிச் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
22 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற அந்தப் பதிவிற்குப் பதிலளிக்கும் போதே மஸ்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பு விகித வீழ்ச்சி புள்ளிவிவரங்கள்
ஒரு நாட்டின் மக்கள் தொகை குறையாமல் சீராக இருக்க வேண்டுமானால், ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும் (Replacement rate).
ஆஸ்திரேலியா கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த அளவை விடக் குறைவாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் (ABS) சமீபத்திய கணக்கின்படி, பிறப்பு விகிதம் 1.48 ஆகக் குறைந்து புதிய வரலாற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பெண்கள் தாயாகும் சராசரி வயது 25 ஆக இருந்தது. ஆனால், தற்போது அது 32 வயதாக உயர்ந்துள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயான கேபி காம்ப்பெல் என்ற பெண் பேசுகையில், "தற்போதைய பொருளாதாரச் சூழலில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைதான், ஆனால் அதற்கு சாத்தியமில்லை; ஏனெனில் குழந்த வளர்ப்பு மிகவும் செலவுமிக்கதாக மாறிவிட்டது" என்று கூறியுள்ளார்.
பொருளாதார நிபுணர் டேவிட் கோச் இதுபற்றிக் கூறுகையில், வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் குடும்ப நிதி நெருக்கடிகள் காரணமாக மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் முடிவைத் தவிர்க்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தாலும், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.6% என்ற அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த வளர்ச்சியில் நான்கில் மூன்று பங்கு (75%) வெளிநாடுகளில் இருந்து வரும் குடியேற்றக்காரர்கள் (Immigration) மூலமே நடக்கிறது.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்குக் கடிகாரத்தின்படி (ABS Population Clock), நாட்டின் மக்கள் தொகை அண்மையில் 2.8 கோடியைக் (28 மில்லியன்) கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 1 நிமிடம் 15 விநாடிகளுக்கும் ஒரு நபர் என்ற வீதத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது (பிறப்பு, இறப்பு மற்றும் குடியேற்றக் கணக்குகளின் அடிப்படையில்).
ஆஸ்திரேலியாவில் கடந்த 1961-ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் உச்சகட்டமாக 3.55 ஆக இருந்தது. அதே ஆண்டில்தான் அங்கு கருத்தடை மாத்திரைகள் அறிமுகமாகின. அதன்பிறகு பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
பெண்கள் தங்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மாறிவரும் குடும்பக் கலாச்சாரம் காரணமாகத் தங்களின் முப்பது வயதுகளிலேயே முதல் குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இதனால் ஒட்டுமொத்தமாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக 'மக்கள்தொகைக்கான மையம்' (Centre for Population) தெரிவித்துள்ளது.