ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பல தசாப்த கால திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, வெஸ்டர்ன் சிட்னி சர்வதேச விமான நிலையம் (WSI) திறக்கப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய புதிய விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து முதல் விமானம் இந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் திகதி புறப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் விற்பனை புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
கோல்ட் கோஸ்ட் (Gold Coast) நகருக்கான ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனத்தின் விமானமே இந்த புதிய விமான நிலையத்தின் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக அமையவுள்ளது.
இந்த புதிய விமான நிலையத்திலிருந்து சேவைகளை வழங்கும் முதல் இரண்டு நிறுவனங்களாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் (Qantas) விளங்குகின்றன.
வான்வழிப் போக்குவரத்து அதிகரிப்பதன் மூலம், ஆஸ்திரேலியாவின் பரபரப்பான வான்வழிப் பாதைகளில் நிலவும் நெரிசல் குறையும் என்று இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
WSI விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி சைமன் ஹிக்கி (Simon Hickey) கூறுகையில்,
"உலகளாவிய ரீதியில் நிலவும் மோதல்கள் இந்தத் துறைக்கு தொடர்ந்து சவாலாக இருந்தாலும், இன்றைய உள்நாட்டு டிக்கெட் விற்பனைத் தொடக்கமானது இந்த விமான நிலையத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. இதன் மூலம் வெஸ்டர்ன் சிட்னி பகுதி மக்கள் 24 மணி நேரமும் நாட்டின் பிற பகுதிகளுக்குப் பயணிக்க முடியும்," என்றார்.
ஜெட்ஸ்டார் நிறுவனம் மெல்போர்ன், பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 21 விமானங்கள் வரை இயக்கவுள்ளது.
குவாண்டாஸ் நிறுவனம் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களுக்கு வாரத்திற்கு 8 சேவைகளை வழங்கவுள்ளது.
தற்போது சிட்னியில் உள்ள Kingsford-Smith விமான நிலையத்தைப் போலல்லாமல், இந்த புதிய விமான நிலையத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் (Curfews) கிடையாது.
இதனால் பயணிகள் வழக்கமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்திலும் தடையின்றி பயணிக்க முடியும்.
உள்ளூர் மக்களின் எதிர்ப்பு
2023-ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தின் விமானப் பாதைகள் (Flight paths) வெளியிடப்பட்டபோது, உள்ளூர் மக்களிடமிருந்து, குறிப்பாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான புளூ மவுண்டன்ஸ் (Blue Mountains) பகுதி மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
விமானங்களின் சத்தம் தங்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்நாட்டுப் போக்குவரத்துக்கான டிக்கெட் விற்பனைக்கு முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து ஆகிய நகரங்களுக்கான சர்வதேச விமான சேவைகள் அறிவிக்கப்பட்டன. இவை முறையே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்குகின்றன.