ஈரான் தனது நாட்டின் எல்லைகளைத் தாண்டி மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக, சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றவியல் கும்பல்களை ஈரான் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவது "மிகவும் மோசமான" செயல் என்று மேற்படி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
"எங்கள் நாட்டு மண்ணில் உள்ள மக்களைக் கொல்ல முயல்வது, கடத்துவது, துன்புறுத்துவது, அச்சுறுத்துவது அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவை எங்களது நாட்டின் இறையாண்மையையும் சர்வதேச விதிகளையும் சீர்குலைப்பதாகும். இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஈரானின் 'இஸ்லாமிய புரட்சிகர காவல் படை' (IRGC) உளவு அமைப்புகளும், அதன் வெளிநாட்டு செயல்பாட்டுப் பிரிவான 'குத்ஸ் படையும்' (Quds Force), ஈரானிய அதிருப்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் யூத, இஸ்ரேலிய சமூகத்தினருக்கு எதிராக "கொலை வெறிச் சதித்திட்டங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில்" ஈடுபட்டுள்ளதாக அந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், "எங்கள் நாடுகளையும் எங்கள் மக்களையும் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த நடவடிக்கைகளை இப்போதே நிறுத்த வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மெல்போர்னில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலம் (Synagogue) மீதான தீவைப்புத் தாக்குதல் மற்றும் சிட்னியில் உள்ள ஒரு கோஷர் (Kosher) உணவகத்திற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் என குறைந்தபட்சம் இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதர் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா ஈரானுக்கான தனது தூதரைத் திரும்பப் பெற்றதுடன், தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
கடந்த நவம்பர் மாதம், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை, "ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாடு திட்டமிட்டு நடத்திய முன்னெப்போதும் இல்லாத மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயல்" என்று விவரித்த ஆஸ்திரேலிய அரசு, IRGC அமைப்பை 'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் அரசு அமைப்பு' (State sponsor of terrorism) எனப் பட்டியலிட்டது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறும் ஒரு "அவமதிப்பு மற்றும் நியாயமற்ற செயல்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது.
ஐரோப்பாவில் தொடரும் அச்சுறுத்தல்கள்
ஈரானுடன் தொடர்புடைய 'ஹரகத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா' (HAYI) என்ற குழுவினால் ஐரோப்பா முழுவதும் யூத சமூகங்கள், ஈரானிய ஊடகவியலாளர்கள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே இருப்பதாக இந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
The Islamic Movement of the People of the Right Hand என்று பொருள்படும் இந்த HAYI குழு, பிரிட்டன் , பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பேற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக வடக்கு லண்டனில் இரண்டு யூத ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதற்கும், யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக மையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தீவைப்புத் தாக்குதல்களுக்கும் தாங்களே காரணம் என்று HAYI அமைப்பு கூறியதாகத் தெரிகிறது.