சமூக ஊடகங்களில் சுமார் 18 மாத காலமாக பெண்ணொருவரை தொடர்ந்து துன்புறுத்திய குற்றத்திற்காக, விக்டோரியா மாநிலத்தின் முன்னாள் காவல் அதிகாரி ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
55 வயதான கிரெய்க் லைன்ஹாம் என்பவர், பெண்ணிய முகநூல் பக்கம் ஒன்றை நடத்தி வந்த சாரா பேக்கர் (Sarah Baker) என்பவரை அச்சுறுத்தும் வகையில் தகவல் தொடர்பு சேவையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சாரா பேக்கர், தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்த 450 பக்கங்கள் கொண்ட ஸ்கிரீன்ஷாட்டுகளை ஆதாரமாக காவல் துறையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் லைன்ஹாம் மீது மின்னணு ஊடகம் வழியாகப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக (Stalking) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த மே மாதம் டான்டெனாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Dandenong Magistrates' Court) தன் மீதான அச்சுறுத்தல் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பின்தொடர்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
56 வயதான சாரா பேக்கரைத் துன்புறுத்திய காலத்தில், லைன்ஹாம் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டதோடு, அவர் எங்கு வசிக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், இணையதளத்தில் அந்தப் பெண்ணை மற்றவர்களும் வசைபாடுவதற்குத் தூண்டியுள்ளார் என்றும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற வாதத்தின் போது, சாரா பேக்கர் ஒரு எழுத்தாளர் என்பதும், அவர் அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளைச் சுயாதீனமாக வெளியிட்டு வந்தவர் என்பதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் "Sarah J. Baker's Teacup" என்ற முகநூல் பக்கத்தையும், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை "Things Misogynists Say" (பெண் வெறுப்பாளர்கள் கூறும் விஷயங்கள்) என்ற மற்றொரு பக்கத்தையும் நடத்தி வந்துள்ளார்.