பாகிஸ்தானில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை, பாகிஸ்தானின் சக்வால் நகரில், Hania Ahmed என்ற சிறுமி காவல்து றையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கம் தெரிவித்துள்ளது.
"இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் குறிப்பாக 9 வயது சிறுமியின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது" என்று மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆசிம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வாடகை கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் காவல்துறையினர் அந்தக் காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பெர்த் நகரின் கியூடேல் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பத்தினரை, தாங்கள் துரத்திச் சென்ற ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் என்று காவல்துறையினர் தவறாகப் புரிந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் தந்தையும், 11 வயது சகோதரனான ஆபான் அகமதும் காயமடைந்தனர். இக்கோர சம்பவத்தில் அவர்களது தாயான டாக்டர் சித்ரா கான் காயமன்றி உயிர் தப்பினார்.
பாதிக்கப்பட்ட இக்குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமியின் சகோதரனும், தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்.
இதில் சிறுமியின் தந்தை அதீல் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சகோதரன் ஆபான் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.