உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் இறப்புக்குக் காரணமான, மிகவும் ஆபத்தான பறவைக் காய்ச்சல் (Bird Flu) வைரஸ், முதன்முறையாக ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளதாக அ அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு காட்டுப் புலம்பெயர் பறவைக்கு (Wild Migratory Bird) நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனையில், இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது 'H5' ரகப் பறவைக் காய்ச்சல் வைரஸ் என்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டால், உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் இந்தத் தொற்று பரவிவிட்டது என்பது அர்த்தமாகும்.
கடும் பாதிப்பை ஏற்படுத்தும் H5 வைரஸ்:
உலகளவில் கடல் பறவைகள், கடல் நாய்கள் (Seals) உள்ளிட்ட பல விலங்கினங்களின் கூட்டங்களை இந்த அதிதீவிர 'H5' வைரஸ் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.
இது குறித்துப் ஆஸ்திரேலிய மத்திய அமைச்சர் ஜூலி காலின்ஸ் (Julie Collins), மேற்கு ஆஸ்திரேலியாவின் முதன்மைத் தொழில்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சித் துறை இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பறவை கண்டெடுக்கப்பட்ட பின்னணி
பெர்த் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்பெரன்ஸ் பகுதிக்கு அருகிலுள்ள 'கேப் லே கிராண்ட்' தேசிய பூங்காவின் (Cape Le Grand National Park) ஒதுக்குப்புறமான கடற்கரையில் இந்த 'பிரவுன் ஸ்குவா' (Brown Skua) வகை பறவை கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பறவை கண்டறியப்பட்டு, உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அன்றைய தினமே இரவோடு இரவாக அது உயிரிழந்துவிட்டதாகவும் மாநில விவசாய மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஜாக்கி ஜார்விஸ் (Jackie Jarvis) தெரிவித்துள்ளார்.
மாநில அதிகாரிகளின் முதற்கட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பறவையின் மாதிரிகள், அது என்ன வகையான வைரஸ் பிரிவு என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக 'CSIRO' ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
"இந்தத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுப் பறவை வளர்ப்புத் தொழிலைப் (Poultry) பாதுகாக்கவும், வனவிலங்குகளைக் கண்காணிக்கவும் மிக விரைவான, ஒருங்கிணைந்த தேசிய அளவிலான அவசரக்கால நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன" என்றும் அமைச்சர் ஜாக்கி ஜார்விஸ் குறிப்பிட்டுள்ளார்.
வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் கொடுத்த விரைவான தகவலின் பேரிலேயே அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பறவையைத் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்தப் பறவை அண்டார்டிகாவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.