ஈரானில் இருந்து சுமார் 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐஸ்போதைப் பொருளை ஆஸ்திரேலியாவிற்குள் கடத்த முயன்ற சிட்னியைச் சேர்ந்த தம்பதியினருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF) அதிகாரிகள், ஈரானில் இருந்து சிட்னியின் Guildford பகுதிக்கு வந்த ஒரு கப்பல் கொள்கலனை (shipping container) ஆகஸ்ட் 2023-இல் பரிசோதித்தபோது, ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) இந்த விசாரணையைத் தொடங்கியது.
அங்கு வைக்கப்பட்டிருந்த ஐந்து நீல நிற ஷிப்பிங் பலகைகளுக்குள் (shipping pallets) மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ தூய்மையான மெத் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
அந்த போதைப்பொருள் பலகைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொள்கலனின் எஞ்சிய பகுதிகள் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிட்னியின் தெற்குப் பகுதியில் உள்ள வாட்டர்லூ (Waterloo) என்ற இடத்தில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 18, 2023 அன்று, AFP அதிகாரிகள் சர்ரி ஹில்ஸ் (Surry Hills) மற்றும் வாட்டர்லூ ஆகிய பகுதிகளில் சோதனை வாரண்டுகளை அமல்படுத்தி அதிரடி சோதனை நடத்தினர்.
அச்சோதனையின் போது, குறியாக்கம் செய்யப்பட்ட (encrypted) ஒரு தகவல் தொடர்பு சாதனம், இதர கைபேசிகள், சரக்குகளில் இருந்து அகற்றப்பட்ட கடத்தல் பலகைகள் மற்றும் பிற போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வணிக ரீதியிலான அளவிலான மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை வைத்திருக்க முயன்ற குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் (Criminal Code) பிரிவு 307.5(1)-இன் கீழ் இந்த தம்பதியினர் குற்றவாளிகள் என 2 அக்டோபர் 2025 அன்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், 36 வயதுடைய அந்த நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 32 வயதுடைய அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, இந்த தம்பதியினர் போலியான முகவரிகளைப் பயன்படுத்தியதோடு, கப்பல் சரக்குகளை பலமுறை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி அனுப்பியுள்ளனர் என்றும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.