ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் இரண்டு முக்கிய வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதால், மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் சுமார் 500 டொலர்கள்வரை கூடுதல் பலனைப் பெறவுள்ளனர். மேலும் பல வரிச் சலுகைகளும் விரைவில் வரவுள்ளன.
கடந்த மே மாதம் Labor கட்சி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தொழிலாளர்களுக்கான புதிய 1000 டொலர் உடனடி வரி விலக்கு (instant tax deduction) திட்டம் சேர்க்கப்பட்டதுடன், மிகக் குறைந்த வருமான வரி வரம்பிற்கான (tax bracket) வரிக்குறைப்பும் உறுதி செய்யப்பட்டது.
இந்த உடனடி வரி விலக்கு திட்டத்தின் மூலம், சுமார் 6.2 மில்லியன் தொழிலாளர்கள், அதாவது ஒட்டுமொத்த வரி செலுத்துவோரில் 42 சதவீதத்தினர், எந்தவொரு ரசீதையும் (receipts) சமர்ப்பிக்காமலேயே தங்களின் வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்தில் 1000 டொலர் வரை குறைத்துக் கொள்ள முடியும்.
இதன் மூலம், அவர்கள் தங்களின் 2026-27 நிதியாண்டிற்கான வரித் தாக்கலை (tax return) மேற்கொள்ளும்போது, சராசரியாக 205 டொலர்வரை கூடுதல் தொகையைத் திரும்பப் பெற வழிவகை ஏற்படும்.
இத்துடன், கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிக்குறைப்புத் திட்டத்தின்படி, 18,201 டொலர் முதல் 45,000 டொலர் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்படும் 16 சதவீத வரி விகிதம் 15 சதவீதமாகக் குறைக்கப்படும்.
இதன் விளைவாக, வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனும் இந்த நிதியாண்டில் 268 டொலர் வரை திரும்பப் பெறுவர்.
இந்த இரண்டு மாற்றங்களின் மூலம், ஒரு சராசரி தொழிலாளி 2026-27 நிதியாண்டில் தனது கையில் கூடுதலாக 473டொலர் ஐப் பெற முடியும்.
இருப்பினும், இந்தத் தொகை அதற்கு அடுத்த ஆண்டில் மேலும் அதிகரிக்கும்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த வரிக்குறைப்பின் மூலம், ஜூலை 1, 2027 முதல் மிகக் குறைந்த வருமான வரி வரம்பிற்கான வரி விகிதம் 14 சதவீதமாக மேலும் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் ஆண்டுக்குக் கூடுதலாக 268 டொலர் வரை சேமிப்பைத் தரும்.
இந்த வரிச் சலுகைகள், மூலதன ஆதாய வரி (capital gains tax) மற்றும் நெகட்டிவ் கியரிங் (negative gearing) ஆகியவற்றில் கொண்டுவரப்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மசோதா தற்போது செனட் சபையின் பரிசீலனையில் உள்ளதுடன், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிரீன்ஸ் (Greens) கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) வரி செலுத்துவோர் அவசரமாக முன்கூட்டியே வரித் தாக்கல் செய்வதைத் தவிர்க்குமாறு இன்று எச்சரித்துள்ளது. அவ்வாறு முன்கூட்டியே தாக்கல் செய்வது சுமார் 5,95,000 வரித் தாக்கல்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக அது குறிப்பிட்டுள்ளது.