ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர் பறவைக்கு, ஆபத்தான H5 பறவைக் காய்ச்சல் (H5 bird flu) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த வகை பாதிப்பு உறுதி செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் , நைட்ஸ் கடற்கரையில் (Knights Beach) கண்டெடுக்கப்பட்ட Giant Petrel என்றழைக்கப்படும் புலம்பெயர் பறவைக்கே இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய பிரீமியர் பீட்டர் மலினாஸ்காஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14 அன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இரண்டு பறவைகள் உள்ளூர் வனவிலங்கு மீட்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஜூன் 19 அன்று இது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவில், ஒரு பறவைக்கு தொற்று இல்லை என்பதும், மற்றொரு பறவைக்கு (H5 பாதிப்பு) தொற்று இருப்பதும் இன்று மதியம் உறுதியானது.
பாதிக்கப்பட்ட பறவைகளைக் கையாண்ட தன்னார்வலர்களுக்குத் தேவைப்பட்டால் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் (Anti-viral medication) வழங்கப்படும் என்று பிரீமியர் தெரிவித்துள்ளார்.
இது மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பரவிய தொற்று அல்ல என்றும், புலம்பெயர்ந்த பறவை மூலம் நேரடியாக வந்ததாகும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கு ஆஸ்திரேலியாவின் 'எஸ்பெரன்ஸ்' (Esperance) நகருக்கு அருகில் இரண்டு பறவைகளுக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது அங்கிருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள 'டன்ஸ்பரோ' (Dunsborough) சுற்றுலா நகருக்கு அருகிலும் மேலும் ஒரு பறவைக்கு தொற்று இருப்பது ஆரம்பகட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இது CSIRO அமைப்பால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
எஸ்பெரன்ஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 'போர்பாய்ஸ்' (Porpoise - கடல் பன்றி வடிவிலான பாலூட்டி) ஒன்றின் மாதிரிகளும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.