விக்டோரியாவில் கொக்கைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் என்று நினைத்து, ஹெராயின் போதைப்பொருளை அதிகமாகப் பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் இரத்தப் பரிசோதனைகளில் பல்வேறு வகையான போதைப்பொருட்களின் கலவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முற்றிலும் மாறுபட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிற போதைப்பொருட்களுடன் ஹெராயின் கலக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு எச்சரிக்கை அறிவிப்பில், சுகாதாரத் துறை (Department of Health) நான்கு தனித்தனி சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், "பலருக்கு" அவசர சிகிச்சை தேவைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
"ஹெராயின் என்பது ஒரு ஓபியாய்டு (Opioid) வகை போதைப்பொருள் ஆகும். இது மிகக் குறைந்த அளவில் உடலில் சேர்ந்தாலும் உயிருக்கே ஆபத்தான நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்" என்று அத்துறை எச்சரித்துள்ளது.
"விக்டோரியாவில் கொக்கைன் மற்றும் மெத்தாம்பேட்டமைன் பயன்படுத்திய பிறகு, ஹெராயின் கலப்பால் போதைப்பொருள் அளவு அதிகரித்து (Overdose) மரணமும் கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன."
கொக்கைன் மற்றும் மெத்தாம்பேட்டமைன் ஆகியவை உடலை உற்சாகப்படுத்தும் ஊக்க மருந்துகள் (Stimulants) ஆகும், ஆனால் ஹெராயின் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைதிப்படுத்தி (Sedative) ஆகும். இதனால் இவை ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை.
"குறிப்பாக இதற்கு முன்பு ஓபியாய்டு வகை மருந்துகளைப் பயன்படுத்தாதவர்கள் அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவர்களிடம், மிகக் குறைந்த அளவிலான ஓபியாய்டுகள் கூட உயிருக்கு ஆபத்தான அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்," என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.