ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை ஒட்டுமொத்த அரபு உலகத்துடன் சேர்ந்து பாலஸ்தீன மக்களும் இரவு முழுவதும் கொண்டாடினர்.
டல்லாஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், கூடுதல் நேர முடிவில் எகிப்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என சமநிலை வகித்தன.
அதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் எகிப்து 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் நாக்-அவுட் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஹாரி சௌட்டர் மற்றும் லூகாஸ் ஹெரிங்டன் ஆகியோர் பெனால்டி வாய்ப்புகளைத் தவறவிட்ட நிலையில், எகிப்தின் ஹொசாம் அப்தெல்மகித் வெற்றிக்கான கோலை அடித்தார்.
இதன் மூலம் அடுத்த சுற்றில் அர்ஜென்டினா அல்லது கேப் வெர்டே அணியை எகிப்து எதிர்கொள்ளவுள்ளது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ஹசன்,
"இறைவன் பாலஸ்தீனர்களுக்கு வெற்றியைத் தரட்டும், அவர்களின் தியாகிகளுக்கு இரக்கம் காட்டட்டும். இந்த வெற்றியை எகிப்து மக்களுக்கும், அன்பான மற்றும் கண்ணியமிக்க பாலஸ்தீன மக்களுக்கும் நான் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.
உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் நாடு பெற்ற இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து, எகிப்து மற்றும் பாலஸ்தீன ஆகிய இரு நாடுகளின் கொடிகளையும் ஹசன் மைதானத்திற்குள் ஏந்திச் சென்றார்.
ஒட்டுமொத்த எகிப்து அணியினரும் மைதானத்தில் மண்டியிட்டு தரையைத் தொட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
இதற்கிடையில், பல பாலஸ்தீன கால்பந்து ரசிகர்கள் எகிப்தின் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.