ஆஸ்திரேலியாவின் வணிகரீதியான கோழிப் பண்ணைகளில் எச்5 (H5) பறவைக் காய்ச்சல் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ள நிலையில், கடலோரப் பகுதியில் மேலும் ஒரு காட்டுப் பறவைக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது சந்தேகிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட 'பெரிய பெட்ரல்' (Giant petrel) வகை கடல் பறவை ஒன்றுக்கு எச்5 பறவைக் காய்ச்சல் இருப்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆஸ்திரேலியா தழுவிய அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை எட்டாக உயரக்கூடும் என்பதால் மேலதிக பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் (NSW) ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் புலம்பெயர்ந்த 6 கடல் பறவைகளுக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவின் பெட்ரல் பறவை மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் சந்தேகிக்கப்படும் மற்றொரு பாதிப்பு ஆகிய இரண்டும் உறுதி செய்யப்பட்டால், மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் இந்த வைரஸ் முதன்முதலில் கடந்த ஜூன் 14 அன்று, மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையான எஸ்பெரன்ஸ் (Esperance) பகுதியில் உள்ள ஒரு 'பிரவுன் ஸ்குவா' (Brown skua) பறவையில் கண்டறியப்பட்டது.
தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவின் யார்க் தீபகற்பத்தில் உள்ள ஹார்ட்விக் வளைகுடாவில் (Hardwicke Bay) நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெட்ரல் பறவையின் மாதிரிகள், இறுதி உறுதிப்படுத்தலுக்காக ஜீலோங்கில் (Geelong) உள்ள சிசைய்ரோவின் (CSIRO) ஆஸ்திரேலிய நோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இது உறுதி செய்யப்பட்டால், இது தெற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பாதிப்பாகப் பதிவாகும்.
இது குறித்து தெற்கு ஆஸ்திரேலிய முதன்மைத் தொழில்துறை அமைச்சர் கிளாரி ஸ்கிரிவன் (Clare Scriven) செவ்வாய்க்கிழமை அடிலெய்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
"இந்தத் தகவல் ஏமாற்றமளித்தாலும், புலம்பெயரும் காட்டுப் பறவைகள் மூலம் இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால், இது நாம் எதிர்பார்க்காத ஒன்று அல்ல. இது ஒரு தனித்த சம்பவமாகக் கருதப்படுவதோடு, உள்ளூர் வனவிலங்குகளுக்குப் பரவியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மிக முக்கியமாக, தெற்கு ஆஸ்திரேலியாவின் வணிகரீதியான கோழிப் பண்ணைகளிலோ, கூண்டுகளில் வளர்க்கப்படும் பறவைகளிலோ அல்லது ஆஸ்திரேலியாவின் வேறு எந்தப் பகுதியிலோ இந்த வைரஸ் இன்னும் நிலைபெறவில்லை."
'பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை':
ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதிகளில் நேர்மறைப் முடிவுகள் அதிகரித்து வந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் எந்தவொரு பறவைக் காய்ச்சல் நெருக்கடியும் இல்லை என்றும், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அம்மாநில அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸின் மிட் நார்த் கோஸ்ட் (Mid North Coast) பகுதியில் முதன்முதலாக எச்5என்1 (H5N1) பாதிப்பு ஒரு பறவையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் தங்களது பறவைகளை தற்காலிகமாக கூரைகளுக்குள் அடைத்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் விவசாய அமைச்சர் தாரா மொரியார்ட்டி (Tara Moriarty) ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஒரேயொரு பறவைக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இங்கு எந்த நெருக்கடியும் இல்லை, பொதுமக்கள் வழக்கம் போல் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளைத் தடையின்றி வாங்கலாம்" என்றார்.
இந்த வைரஸால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடனடி ஆபத்து மிகவும் குறைவு என்று கூறும் அதிகாரிகள், அதேநேரம் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கோரியுள்ளனர்:
நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் மற்றும் வனவிலங்குகளை யாரும் கைகளால் தொடக் கூடாது.
வீட்டு வளர்ப்புப் பிராணிகளை இத்தகைய பறவைகளின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட விலங்குகளைக் கண்டால், அது கண்டறியப்பட்ட தேதி, நேரம், இடம் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கையைக் குறித்து வைத்து, உரிய அவசர உதவி மையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதேவேளை, கண்காணிப்புப் பணிகளை மட்டும் நம்பியிருக்காமல், இந்த வைரஸ் உள்ளூர் பறவையினங்களுக்குப் பரவுவதைத் தடுக்கவும், வனவிலங்குகளின் நோய் எதிர்ப்புத் திறனை வலுப்படுத்தவும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.