ஆஸ்திரேலியாவின் NT காலிவின்கு (Galiwin'ku) சமூகத்தில், தனது 17 வயதுடைய இளம் பெண் துணையை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 34 வயதுடைய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அச்சிறுமி கடுமையான அடி காயங்கள் ) காரணமாகவே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலையன்று எல்கோ தீவில் (Elcho Island) உள்ள ஒரு வீட்டிற்கு அவசர உதவிக்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் அந்தச் சிறுமி சுயநினைவற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
"உள்ளூர் காவல்துறையினர் மற்றும் அங்குள்ள சுகாதார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிசோதித்ததில், அந்தச் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது," என்று NT காவல்துறை ஊடகப் பேச்சாளர் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்றே அந்த 34 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில், புலனாய்வுப் பிரிவினர் இந்த வாரம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தி, வியாழக்கிழமை மதியம் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
எல்கோ தீவின் மிகப்பெரிய சமூகப் பகுதியான காலிவின்கு, ஈஸ்ட் ஆர்னெம் (East Arnhem) மாகாண எல்லைக்குள் அமைந்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள 34 வயது நபர் வெள்ளிக்கிழமையன்று டார்வின் நீதிமன்றத்தில் (Darwin Local Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.