ஆஸ்திரேலியாவிற்கு 17 வயது சிறுமி ஒருவரைக் கடத்தி வந்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சூர்யா சுபெக்தி (Surya Subekti - 45) என்ற நபருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தவறு செய்ததற்காக அவர் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி நிக்கோல் நோமன் (Nicole Noman), அவர் பிணையில் வர முடியாதவாறு 4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் கட்டாய சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், 2030 நவம்பருக்கு முன்பாக அவர் விடுதலை பெற முடியாது என்றும் உத்தரவிட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சுபெக்தி, 18 வயதுக்குட்பட்ட ஒருவரைப் பாலியல் சேவைக்காக ஆஸ்திரேலியாவிற்குள் அழைத்து வந்தது மற்றும் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையே அதிகபட்சமாக 25 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, ஒப்பந்தக் கடமைகளை முழுமையாக அறிந்துகொண்டு ஆஸ்திரேலியா வந்தார் என்று சுபெக்தியின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
ஆனால், ஆஸ்திரேலிய சட்டப்படி அவர் ஒருசிறுமி என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான சட்டப்பூர்வ வயது 18 என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சிறுமியின் சம்மதம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று கூறி அந்த வாதத்தை நிராகரித்தார்.
சிறுமிக்கு 17 வயது என்பதை நன்கு அறிந்திருந்த சுபெக்தி, அவரது வயது அதிகாரிகளிடம் மாட்டாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும், அந்தச் சிறுமியின் விசா, போக்குவரத்து மற்றும் இரண்டு மாதங்களாக குறிப்பிட்ட சில விபச்சார விடுதிகளுக்கு அவரை அனுப்புவது உள்ளிட்ட கடத்தல் வேலைகளில் சுபெக்தி முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்து, சிறுமியை விபச்சார விடுதிகளுக்கு ஏற்றிச் சென்ற ஓட்டுநரான எல்டன் வாலண்டினோ (Elton Valentino - 32) என்பவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், விபச்சார விடுதியில் இருந்த அனைத்துப் பெண்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று சுபெக்தி கூறியதை நம்பியே தான் இதில் ஈடுபட்டதாக வாலண்டினோ தெரிவித்தார்.
அவர் 2024 அக்டோபர் முதல் காவலில் இருந்து வருவதாலும், தனது தவறுக்காக உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தியதாலும், அவர் இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதத்தில் நன்னடத்தை பிணையின் கீழ் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.