ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள தபால் தரம் பிரிக்கும் மையத்திலிருந்து பார்சல்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், 57 வயதுடைய தபால் ஊழியர் ஒருவர் மீது ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா போஸ்ட் (Australia Post) நிறுவனம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார், குறிப்பிட்ட அந்த ஊழியரின் இரவு நேரப் பணி மாற்றங்களின் போதே பார்சல்கள் காணாமல் போயுள்ளதை உறுதி செய்தனர்.
கடந்த ஜூன் 2 மற்றும் 3ஆம் திககளில் தனது இரவு நேரப் பணியின் போது, அவர் தபால் பார்சல்களை அகற்றி, அவற்றைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அர்மடேல் (Armadale) பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்து 34,000 ஆஸ்திரேலிய டாலர் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
தபால் பெட்டிகளைச் சேதப்படுத்திய மற்றும் கையாடல் செய்த இரு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இக்குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து ஆண்டுகள் வரை அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், கையாடல் செய்யப்பட்ட மற்றும் திருடப்பட்ட பிற பார்சல்கள் குறித்தும் போலிஸார் தங்களது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.