ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் காணாமல் போன 13 வயதுச் சிறுமியைத் தேடும் பணியின் போது மனித உடலின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலனாய்வுப் பிரிவினர் , ஸ்வான் ஹில் (Swan Hill) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
13 வயதான லெய்லா Layla Jeffery என்ற சிறுமி கடந்த ஜூலை 4 அன்று டொனால்ட் (Donald) நகரில் உள்ள மெக்ராக்வென் வீதியில் (McCracken Street) கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள் அவர் காணாமல் போனதாகப் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பைர்ன் வீதிக்கு (Byrne Street) அருகிலுள்ள புதர்க்காடுகளில் உள்ளூர் பொலிஸார், மோப்ப நாய் படை, விமானப் பிரிவு , தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில அவசரக்கால சேவை அமைப்பினர் இணைந்து ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை நடத்தினர்.
வியாழக்கிழமை பிற்பகுதியில் மனித உடலின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், காணாமல் போன சிறுமியுடையதாகவே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதால், காணாமல் போன நபர்களைத் தேடும் பிரிவின் துப்பறியும் பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கியக் கைதுகள் மற்றும் பொலிஸார் அறிக்கை
காணாமல் போனோர் பிரிவின் துப்பறியும் ஆய்வாளர் டேவிட் டன்ஸ்டன் (David Dunstan) கூறுகையில், 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், டொனால்ட் நகரைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவரும், மெல்போர்னைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரும் பொலிஸார் விசாரணைக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
லெய்லாவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர் டன்ஸ்டன் கூறினார்.
"அவர் எவ்வளவு காலம் அங்கிருந்திருக்கலாம் மற்றும் அவர் எப்போது இறந்தார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நாங்கள் உடற்கூறாய்வு (Pathology examination) முடிவுகளையே நம்பியிருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.