ரஷ்யாவுடன் தொடர்புடைய ஹேக்கர்கள், ஆஸ்திரேலியாவின் முக்கிய துறைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக, ஆஸ்திரேலிய சமிக்ஞைகள் இயக்குநரகம் (ASD) மற்றும் அதன் இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச கூட்டாண்மை முகமைகள் இணைந்து கூட்டு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்ய உளவு அமைப்பான FSB-இன் கீழ் இயங்கும் இந்த சைபர் குற்றவாளிகள், உலகம் முழுவதும் உள்ள நிதிச் சேவைகள், சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாநில மற்றும் உள்ளூர் அரசு முகமைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எவ்வாறு தாக்குதல் நடத்தப்படுகிறது?
முறையான பாதுகாப்பு இல்லாத ரௌட்டர்களை (Routers) இலக்கு வைக்கும் இந்த ஹேக்கர்கள், நிறுவனங்களின் உள்நுழைவு விபரங்கள் (Login details) போன்ற முக்கிய தகவல்களைத் திருடுவதற்கு, 'டிபால்ட் பாஸ்வேர்டுகளை' (Default passwords - சாதனங்களுடன் வரும் பொதுவான கடவுச்சொற்கள்) யூகிப்பது போன்ற எளிய முறைகளைக் கையாளுகின்றனர்.
இந்த எச்சரிக்கையானது ஆஸ்திரேலியாவின் ASD அமைப்போடு இணைந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) மற்றும்பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் ஒத்த பாதுகாப்பு முகமைகளால் கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கைகள்
இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அடிப்படை நெட்வொர்க் புதுப்பிப்புகள் (Network updates), நெட்வொர்க் சாதனங்களைப் பாதுகாத்தல் மற்றும் வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல் போன்ற சில எளிய வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.