இரண்டு ஆஸ்திரேலியப் பயணிகள் மெத்தனால் (methanol) நச்சு காரணமாக உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என லாவோஸ் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த முடிவைத் தொடர்ந்து, லாவோஸ் தூதரை ஆஸ்திரேலிய அரசு நேரில் அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
உயிரிழந்த ஹொலி மோர்டன்-பௌல்ஸ் (Holly Morton-Bowles) மற்றும் பியான்கா ஜோன்ஸ் (Bianca Jones) ஆகியோரின் குடும்பத்தினரின் வேதனையையும் துயரத்தையும் மேலும் அதிகரிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் (Penny Wong) கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய குடிமக்களான ஹொலி பௌல்ஸ் மற்றும் பியான்கா ஜோன்ஸ் ஆகியோரின் மெத்தனால் நச்சு மரணங்கள் தொடர்பான வழக்கில், லாவோஸ் அதிகாரிகள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாமல் தவிர்ப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு மிகுந்த விரக்தியும் கடும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.
ஹொலி, பியான்கா மற்றும் பிற நான்கு வெளிநாட்டு குடிமக்களுக்கு நேர்ந்த இந்தச் சோகம் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும்.
19 வயதான இந்த இரு இளம்பெண்களும், கடந்த 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் லாவோஸ் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்றிருந்த போது, வாங் வியெங் (Vang Vieng) பகுதியில் உள்ள 'நானா பேக்பேக்கர்ஸ் விடுதியில்' (Nana Backpackers Hostel) மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட மெத்தனால் நச்சுத் தாக்குதலால் அவர்கள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை அன்று, இந்த விவகாரம் தொடர்பாக லாவோஸ் தூதர் ஆஸ்திரேலிய அரசால் நேரில் அழைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தை பென்னி வாங் வெளிப்படுத்தினார்.
இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசின் சிறப்புத் தூதுவரான பப்லோ காங் (Pablo Kang), வெள்ளிக்கிழமை அன்று லாவோஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், அடுத்த வாரம் மணிலாவில் (Manila) லாவோஸ் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்கவுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங், இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவார்.