AUKUS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கான உற்பத்திக்கு நடவடிக்கைக்காக, கப்பல் கட்டும் தளங்களுக்கு 4.6 பில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்தார்.
அடிலெய்டில் உள்ள ஆஸ்போர்ன் கப்பல் கட்டும் தளத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
காமன்வெல்த் ஆஸ்திரேலிய கடற்படை உள்கட்டமைப்பு கப்பல் கட்டும் தளங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட $3.9 பில்லியன் நிதியுடன் கூடுதலாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் இந்த கப்பல் கட்டும் தளங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"இது நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை மையமாக மாறும். வரும் ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் மேலாக அதிகரிக்கும் போது இது நிச்சயமாக அந்த நிலையை அடையும்," என்று மார்லெஸ் கூறினார்.
போராட்டம்
அதேவேளை, லேபர் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வரும் அடிலெய்ட் கன்வென்ஷன் சென்டருக்கு வெளியே, எக்ஸ்டிங்க்ஷன் ரெபெல்லியன் (Extinction Rebellion) அமைப்பின் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
AUKUS ஒப்பந்தத்திற்கு எதிரான இந்தப் போராட்டக்காரர்கள், பாயில் (foil) ஆடைகள் மற்றும் மஞ்சள் நிறத் தொப்பிகளை அணிந்துகொண்டு, டாலர் நோட்டுகள் மற்றும் ராணுவ வீரர்களின் உருவங்கள் அச்சிடப்பட்ட பச்சை நிறக் காற்று நிரப்பப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் மாதிரியைப் பறக்கவிட்டனர்.
மேலும், பல கண்கள் கொண்ட அட்டை மீன் உருவங்களையும், "AUKUS-ஐ உடனடியாக முடக்கு" (Sink AUKUS Now) என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.