சிட்னியின் (Inner-West) பகுதியில் உள்ள வீதியில், பதின்ம வயது சிறுவர் ஒருவரை, கும்பலொன்று தலையில் கத்தியால் குத்தித் தாக்கிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்துள்ளது.
நியூடவுன் (Newtown) நகரின் 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் இரு பதின்ம வயது சிறுவர்களை மூவர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், பொலிஸார் வருவதற்குள் அக்கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கிடைத்த தகவலையடுத்து அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தலையிலும் முதுகிலும் கத்திக்குத்துப் பட்ட 17 வயது சிறுவனுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சீரான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, 'கலவரத்தில் ஈடுபட்டதாக' (affray) சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நியூடவுன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞருக்கு, வரும் ஆகஸ்ட் 18-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது நண்பரும் பரபரப்பான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அக்கும்பலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகப் பொலிஸார் கருதுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் 18 வயது நண்பர் பொலிஸாரின் விசாரணைக்கு உதவி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.