அடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், புதிய இறக்குமதி வரிகளாக 12.5 சதவீதம் வரை விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 60 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல் ஏற்கனவே கடுமையாக விமர்சித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பிரதமர் அல்பானீஸும் இதையே எதிரொலித்தார்.
ஏபிசி நிறுவனத்தின் 'இன்சைடர்ஸ்' நிகழ்ச்சியில், அமெரிக்காவின் இந்த புதிய வரிகள் குறித்து டிரம்பிடம் பேசுவீர்களா என்று கேட்கப்பட்டபோது, "நிச்சயமாக" என்று அவர் பதிலளித்தார்.
"இந்த வரிகள் நியாயமற்றவை," என்று அவர் கூறினார்.
"ஆஸ்திரேலியா - அமெரிக்க உறவின் அனைத்து மட்டங்களிலும் நாங்கள் இந்தப் பிரச்சினையை எழுப்புவோம். ஏற்கனவே அதைச் செய்தும் இருக்கிறோம்."
"வரிகள் என்பது நுகர்வோர் மீது சுமத்தப்படும் ஒரு தண்டனை; வரிகளை விதிக்கும் நாடான அமெரிக்காவிலேயே இது கூடுதல் செலவுகளுக்கு வழிவகுக்கும், மேலும் எங்களது அமெரிக்க நண்பர்களுடன் நாங்கள் கொண்டுள்ள வர்த்தக உறவையும் இது பாதிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஈரான் மீது டிரம்ப் தொடர்ந்து நடத்தி வரும் போரின் தாக்கத்தை, உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியாவும் எதிர்கொண்டு வருகிறது. இது பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலையைக் குறைப்பதற்காக ஃபெடரல் அரசு எரிபொருள் கலால் வரியில் (Fuel excise) தற்காலிகக் குறைப்பை அமல்படுத்தியிருந்தது. ஆனால், இந்த வரிக்குறைப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த வரிக்குறைப்பு ஏற்கனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாதபோதிலும், மீண்டும் அதை நீட்டிப்பதை அல்பானீஸ் நிராகரித்தார்.
ஆஸ்திரேலியாவிடம் போதுமான எண்ணெய் இருப்பு இருப்பதையும், பெட்ரோல் பயன்பாடு குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய அல்பானீஸ், எரிபொருள் கலால் வரிக்குறைப்பைத் தொடர்வது "தற்போதைய சூழலில் தொழிற்கட்சியின் (Labor) திட்டத்தில் இல்லை" என்று கூறினார்.
"நாம் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலத்தில் வாழ்கிறோம், ஆனால் [பெட்ரோல்] பயன்பாடு குறைந்து வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"வெளிப்படையாகச் சொல்வதானால்... [போர்] எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, மோதல் எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவு அதிகமான தாக்கமும் இருக்கும்."
"இது உலகின் மறுபக்கத்தில் நடக்கும் ஒரு போர். இதில் நாங்கள் முக்கியப் பங்காளிகள் அல்ல, ஆனால் இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்."
"நாங்கள் தொடர்ந்து பதற்றத்தைக் தணிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம், அதைத் தொடர்வோம்" என்றும் அவர் கூறினார்.
புதிய வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்தபோதிலும், அதிபர் டிரம்புடனான தனது உறவு இன்னும் வலுவாகவே இருப்பதாக அவர் கூறினார்.
"நாங்கள் டிரம்புடன் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறோம்," என்று கூறிய அவர், "[நாங்கள்] அதைத் தொடர்ந்து செய்வோம்" என்றும் தெரிவித்தார்.