ஆஸ்ரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வட மற்றும் தென் ஆசியப் பிரிவிற்கான உதவிச் செயலர் கரேன் ராட்போர்ட் ( Karen Radford) இலங்கை பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அவருடன் கொழும்பிலுள்ள ஆஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமன்டா ஜோன்சன் மற்றும் கப்டன் பென் பென்னல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சுமுகமான சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ஆஸ்ரேலியாவுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பொதுவான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இலங்கை மற்றும் ஆஸ்ரேலியாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவும் பாதுகாப்பு கூட்டாண்மையும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.