NSW மத்திய கடற்கரைப் பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிறுவன் ஒருவர்மீது மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28, செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணியளவில், கோஸ்போர்ட்டில் (Gosford) உள்ள மேன் வீதிக்கு (Mann Street) அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
அங்கு 22 வயதுடைய நபர் ஒருவர் பல கத்திக் குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்த போதிலும், உயிரிழந்தார்.
விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று அதிகாலை லேக் ஹேவன் (Lake Haven) பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற பொலிஸார், 15 வயதுச் சிறுவன் ஒருவரையும் , 45 வயது பெண்ணையும் கைது செய்தனர்.
கடுமையான குற்றம் புரிந்த ஒருவரைக் கைது செய்வதைத் தடுத்ததாக/தாமதப்படுத்தியதாக அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
45 வயதுப் பெண் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கறிஞர் பிணை மனுவைத் தாக்கல் செய்த நிலையில், பொலிஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
கடுமையான குற்றச்சாட்டிற்காகத் தேடப்பட்டு வந்த சிறுவனைக் கைது செய்ய பொலிஸார் முயன்றபோது, அதை அப்பெண் தடுத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்பெண்ணின் வழக்கறிஞர் ஜாவித் பேஸ் (Javid Faiz), தனது கட்சிக்காரர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்றும், சிறப்புத் தேவைகள் கொண்ட ஒரு குழந்தையைப் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது ஒரு தீவிரமான விவகாரம் என்றும், இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சோகமான சம்பவம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்த விவகாரம் எந்தக் கும்பல் மோதலுடனும் (gang) தொடர்புடையது அல்ல என்றும், "ஒரு தொப்பி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை" என்றும் பேஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிணை வழங்கி உத்தரவிட்ட பதில் நீதிபதி லெஸ்லி பிரென்னன் (Leslie Brennan), கொலைக் குற்றத்துக்காகத் தேடப்பட்டு வந்த ஒரு சிறுவனை அப்பெண் மறைத்து வைத்திருந்ததாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறினார்.
"உள்ளே நுழைவதற்காக பொலிஸார் கதவை உடைக்க வேண்டியிருந்தது," என்று பதில் நீதிபதி பிரென்னன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர் பொலிஸாரைத் தடுத்தது போல் தெரிகிறது", ஆனால் அச்சிறுவன் இந்த விவகாரத்திற்காகத்தான் தேடப்படுகிறான் என்பது அப்பெண்ணுக்குத் தெரியுமா என்பது தெளிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அந்தப் பெண் வாரத்திற்கு ஒருமுறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும். இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 11 அன்று நீதிமன்ற விசாரணைக்கு வரும்.