நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் (Greyhound) நாய் பந்தயங்களுக்குத் தடை அமுலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள பயிற்சியாளர்கள் தங்களின் சுமார் 150 நாய்களைச் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
விலங்குகள் நலன் சார்ந்த கவலைகள் மற்றும் புகார்கள் காரணமாக, இந்தத் தடை முதன்முதலில் டிசம்பர் 2024-இல் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமாக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை முதல் இத்தடை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்தது.
நியூசிலாந்தின் கடைசி பந்தய சீசனின் போது 10 கிரேஹவுண்ட் நாய்கள் தயவுக்கொலை (Euthanised) செய்யப்பட்டன. இதில் ஒரு நாய், தடை அமுலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நியூசிலாந்து கிரேஹவுண்ட் மாற்ற முகமையின் (Greyhound Transition Agency - GTA) தலைவர் ஹீதர் சிம்சன் கூறுகையில்,
சுமார் 150 நாய்களை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பந்தயங்களில் பங்கேற்க வைப்பதற்காக 'கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து' அமைப்பு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதை தான் அறிவதாகத் தெரிவித்தார்.
"பயிற்சியாளர்கள் தங்களது நாய்களை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் எந்த விதியும் சட்டத்தில் இல்லை; மேலும், இந்த நாய்களில் சிலவற்றிற்கு ஆஸ்திரேலியர்களும் பகுதி உரிமையாளர்களாக உள்ளனர்," என்று அவர் ரேடியோ நியூசிலாந்திடம் கூறினார்.
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தைத் (ACT) தவிர, ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிரேஹவுண்ட் நாய் பந்தயங்கள் இன்னும் சட்டப்பூர்வமாகவே உள்ளன.
டாஸ்மேனியாவில் இந்தத் தொழிலைப் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரும் திட்டங்கள், மேல்சபையில் போதிய ஆதரவு கிடைக்காததால் ஏப்ரல் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் எழும் கவலைகள்
ஒரு தனியார் கிரேஹவுண்ட் பந்தயக் குழுவின் கசிந்த செய்தி மூலம் இந்தச் சிறப்பு விமானங்கள் பற்றிய தகவல் முதன்முதலில் வெளியானது என்று பசுமைக் கட்சியின் செனட்டர் மெஹ்ரீன் பரூக்கி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் மேலும் 1,400 நாய்கள் எஞ்சியிருக்கும் என்றும், அவற்றிற்கு GTA முகமை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாய்கள் ஒரு நலத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஹீதர் சிம்சன் தெரிவித்துள்ளார்.