சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 தடவைகள் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் திகதி முடிவுக்கு வந்தது. சிரியா ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின.
இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேவேளை சிரிவாயில் நிலையற்ற தன்மை நிலவும் நிலையில், பொதுமக்களை பாதுகாக்கவும், வன்முறைகளை தவிர்க்கவும் கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிரியாவில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் ஆஸ்திரேலியா கண்டனம் வெளியிடவில்லை. மாறாக பயங்கரமான காலகட்டத்தின் முடிவாக இது அமைய வேண்டும் எனக் கூறியுள்ளது.