இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவராக செயற்பட்ட ஹிமாலி அருணதிலக்கவால் தவறேதும் இழைக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“ வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்குரிய சம்பளத்தை இலங்கை அரசே வழங்கும் எனவும், இலங்கையில் அமுலில் உள்ள சம்பள நடைமுறையே பின்பற்றப்படும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிமாலி அருணதிலகாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலகா, 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியபோது அவரது கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என்றும், எனவே, அவர் பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் ஆஸ்திரேலியா பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியவை வருமாறு,
“ இலங்கை அரசினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும். எனினும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சம்பள அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவான தொகையாக இருக்கக்கூடும் .
எனவே இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகாவுடன் தொடர்புடைய பிரச்சினை இதனடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்கிறது. மாறாக அவர் அரசிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை பணியாளுக்கு வழங்காமல் இருக்கவில்லை. உண்மையில் இது நாட்டின் கொள்கை சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.