காசாமீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாலஸ்தீனத்தில் பலியான பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் உள்ள அல்-அவ்தா வைத்தியசாலைக்கு வெளியே, 'ஊடகம்" என எழுதப்பட்டிருந்த வாகனத்தில் சுமார் 5 பத்திரிகையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் 'அல்-குத்ஸ் டுடே' எனும் ஊடக நிறுவனத்தை சேர்ந்தவர்களாவார்கள்.
இந்நிலையில், குறித்த வைத்தியசாலையை சுற்றியுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் இராணுவம் ராக்கெட்டை வீசி தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் வாகனத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள ஊடக அமைப்புகள் உட்பட உலக ஊடக அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
குறிப்பாக காசாவில் சிவில் மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலை ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.