ஆஸ்திரேலியாவில் வருடாந்தம் நடைபெறும் Sydney to Hobart படகுப் போட்டியில் பங்குபற்றிய இருவர், இருவேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 55 வயதான ஆணொருவர் படகின் பாயை தாங்கும் கம்பினால், தலைப்பகுதியில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது சக குழுவினர் விரைந்து முதலுதவிச் சிகிச்சை அளித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல்போனது.
அத்துடன், தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 65 வயது ஆணொருவரும் இதேபோன்றதொரு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரண்டு படகுகளும் தற்போது துறைமுகத்தில் இருப்பதாகவும், சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் தெரியவருகின்றது.
சம்பவங்கள் நடந்தபோது இருவரும் தங்களது படகின் பாய்மரங்களை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கலாம் எனக்கருதப்படுகின்றது.
" Sydney to Hobart வரையான படகோட்டப்போட்டி ஆஸ்திரேலிய பாரம்பரியம், மகிழ்ச்சியான நேரத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை கவலையளிக்கின்றது."- என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இன்று இரவு அல்லது நாளை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Sydney to Hobart படகோட்டப்போட்டியில் 1998 ஆம் ஆண்டு சீரற்ற காலநிலையில் ஆறு பேர் உயிரிழந்தனர். அச்சம்பவத்துக்கு பிறகு இம்முறையே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.