நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என அமெரிக்க பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் இராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியும் இருந்தது. வாகனத்தில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபர் நிச்சயமாக இத்தாக்குதலை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை.
இவருக்குப் பின்னணியில் இரண்டு பேர் இருந்துள்ளனர் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப் பிஐ சந்தேகிக்கிறது. அதனால் தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலேயே இந்த சம்பவத்தை எப்பிஐ விசாரித்துவருகின்றது.
அதேவேளை இத்தாக்குதல் சம்பவத்தை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.குறித்த தாக்குதல் சம்பவத்தால் ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும், தமது தேசம் அமெரிக்கா பக்கம் நிற்கும் எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.