“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார்.
மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே பேசிவருகின்றார்.
பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. தனது தனிப்பட்ட பகைமையை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியல் செய்கின்றார்.
எனவே, பொன்சேகா கூறும் விடயங்கள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவரின் கருத்தை மக்கள் கருத்தில் எடுக்கமாட்டார்கள்.
போரை முடிக்கும்போது இருந்த இராணுவத் தளபதி என்பதால் அவரை நாம் மதிக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுக்க முற்பட்டார் எனக் கூறுவது அப்பட்டமான பொய். மக்களை பாதுகாப்பதற்காகவே பிரபாகரனை சரணடைய சொன்னார்.
ஏனெனில் வடக்கில் உள்ள மக்களும் தனது மக்கள் என அவர் கருதினார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.