கடந்த மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், இன்று மாணவர் தரப்பு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விசாரணைகளின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளப்போவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த பணிப்புரைக்கு அமைய, பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்கனவே ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட அக்குழுவின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையில் 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, "சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாதவரை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இச்செயலில் ஈடுபட்டோம்" - என்று மாணவர்கள் தரப்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் இந்தத் தலையீடு மற்றும் மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.