கடந்த சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 10ஆம் திகதி பொலிஸார் வாகனங்களுடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்ததோடு, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.
கல்வி நிறுவனத்தின் சுயாதிப்பைப் பாதிக்கும் வகையில் பொலிஸார் வாகனங்களுடன் வளாகத்தினுள் நுழைந்தமைக்கும், உயர் அதிகாரிகளிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தியமைக்கும் மாணவர்கள் ஏற்கனவே தமது கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்குச் சமுகமளிக்குமாறு பதிவாளர் ஊடாகபி பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர். எனினும், மாணவர்கள் அந்த விசாரணைக்குச் செல்லவில்லை. அவர்கள் இன்றே விசாரணைக்குச் சென்றனர்.
பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இன்று மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடருமாயின், போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் மாணவர் சமூகம் எச்சரித்துள்ளது.
"பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்கனவே உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாம் எமது தரப்பு நியாயங்களை விசாரணைக்குழுவிடம் தெளிவாக முன்வைத்துள்ளோம். இவ்வாறானதொரு சூழலில், பொலிஸார் மீண்டும் விசாரணைகளை முன்னெடுத்து எங்களை அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடாகும்." - என்று இன்று போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் தெரிவித்தனர்.